தேனி தனியார் வங்கியில், போலி நகை அடகு வைத்து ரூ.1¾ லட்சம் மோசடி - பெண் கைது


தேனி தனியார் வங்கியில், போலி நகை அடகு வைத்து ரூ.1¾ லட்சம் மோசடி - பெண் கைது
x
தினத்தந்தி 7 Aug 2019 10:15 PM GMT (Updated: 7 Aug 2019 10:47 PM GMT)

தேனி தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.1¾ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி,

தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகவள்ளி (வயது 48). இவர், தேனியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுமார் 12½ பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

கடன் பெற்று ஒரு ஆண்டு கடந்த நிலையில், தவணை தொகையோ, வட்டியோ செலுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில், அவர் அடகு வைத்த நகைகளை எடுத்து சோதனை செய்தனர். அப்போது, அது 30 சதவீதம் தங்க மூலாம் பூசப்பட்டு, 70 சதவீதம் செம்பு கம்பியால் தயாரிக்கப்பட்ட போலியான நகை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம், வங்கி கிளையின் உதவி மேலாளர் கிஷோர் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, கற்பகவள்ளி டி.கள்ளிப்பட்டியில் வசிப்பது தெரியவந்தது.

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார், கற்பகவள்ளியை நேற்று கைது செய்தனர். இந்த மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தியபோது, கைது செய்யப்பட்ட கற்பகவள்ளி ஏற்கனவே தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில் இதேபோன்று போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததும், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story