ஆணாக மாறி தோழியை கரம் பிடித்த இளம்பெண் - ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


ஆணாக மாறி தோழியை கரம் பிடித்த இளம்பெண் - ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 8 Aug 2019 10:30 PM GMT (Updated: 8 Aug 2019 10:50 PM GMT)

ஆணாக மாறி இளம்பெண் ஒருவர் தனது தோழியை கரம் பிடித்தார். இருவரும் தம்பதியாக வந்து போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர் வந்து மனு ஒன்றினை அளித்தனர். அவர்களது பெயர் ஜெய்சன் ஜோஸ்வா, சுகன்யா.

இவர்களில் பியூலா என்ற பெயரில் பெண்ணாக இருந்த ஜெய்சன் ஜோஸ்வா ஆணாக மாறி, ஏற்கனவே திருமணம் ஆன சுகன்யாவை திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.

மனு அளித்தது குறித்து சுகன்யா கூறியதாவது:-

நானும், பியூலாவும் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே இணை பிரியாத தோழிகளாக இருந்துள்ளோம். நாளடைவில் இருவரும் சேர்ந்து வாழ எண்ணி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதற்கு எங்களது பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் பிரித்து விட்டனர். மேலும் கடந்த 2012-ம் ஆண்டு என்னை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதைத் தொடர்ந்து எனக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் எனது கணவர் விபத்தில் படுகாயமடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த நான் எனது பழைய தோழியான பியூலாவை சந்தித்து எனது நிலைமையை விளக்கினேன்.

பின்னர் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தோம். இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பியூலா புதுவைக்குச் சென்று தன்னை ஆணாக மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவர் தனது பெயரை ஜெய்சன் ஜோஷ்வா என்று மாற்றிக்கொண்டார்.

பின்னர் மதுரையில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில் நான் வேலை பார்த்தேன். ஜெய்சன் ஜோஷ்வா காவலாளியாக பணியாற்றி வருகிறார். நாங்கள் கணவன்-மனைவியாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவரும் நிலையில் எனது குழந்தையை நானே வளர்க்க விரும்பி ஜெய்சனிடம் கூறினேன். எனவே எனது முன்னாள் கணவர் வீட்டாரிடம் இருந்து எனது குழந்தையை பெற்றுத் தர வேண்டி மனு கொடுக்க வந்தோம். எங்களை சிலர் பிரிக்க நினைத்தாலும் எங்களின் பாசத்தை களங்கமில்லா நட்பினை காலம் சேர்த்து வைத்து விட்டது. எனது 6 வயது மகள் எனக்கு வேண்டும். அவளை நாங்கள் நன்றாக வளர்த்து சமுதாயத்தில் பெரிய ஆளாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகன்யாவின் மனு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கோர்ட்டை அணுகி சட்டப்படி குழந்தையை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Next Story