கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோவில் தேரோட்டம்


கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:30 PM GMT (Updated: 10 Aug 2019 8:20 PM GMT)

கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனார் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் காட்டு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் மண்டகப்படி தாரர்கள் சார்பில், சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் சாமி வீதி உலா நடைபெற்றது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

தேரோட்டம்

இதையொட்டி மாவயல் காட்டு அய்யனாருக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்டு அய்யனார் திருத்தேருக்கு எழுந்தருளினர். பின்னர் தேரை மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரை முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். அப்போது பக்தர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிந்து நின்று தேங்காய், பழம் வைத்து சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதில் பொன்னமராவதி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மற்றும் கீழத்தானியம், காரையூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மண்டகப்படிதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி, காரையூர் சப்-இன்பெக்டர் ஜெயக் குமார் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.

Next Story