கர்நாடகத்தில் வெள்ளபாதிப்பு: மத்திய அரசின் நிவாரண உதவி உறுதியாக கிடைக்கும்; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை


கர்நாடகத்தில் வெள்ளபாதிப்பு: மத்திய அரசின் நிவாரண உதவி உறுதியாக கிடைக்கும்; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2019 11:50 PM GMT (Updated: 11 Aug 2019 11:50 PM GMT)

கர்நாடகத்தில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் நிவாரண உதவி உறுதியாக கிடைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசிடம் இருந்து நிவாரண உதவி கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். விரைவில் நிதி உதவி கிடைக்கும்.

வெள்ள பாதிப்பு பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட்டுள்ளார். இதன்மூலம் வெள்ள சேதம் பற்றிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிந்து கொண்டிருப்பார். அனைத்து வகையான உதவிகளையும் மத்திய அரசு கர்நாடகத்துக்கு செய்யும். நானும் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டுள்ளேன். அமித்ஷாவும் இன்று (அதாவது நேற்று) வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிட உள்ளார்.

இதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த கவலையும் அடைய வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களுடன் நான் இருக்கிறேன். உங்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன். தொழில்அதிபர்கள் உள்பட பொதுமக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story