கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பறந்து அமித்ஷா பார்த்தார்


கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பறந்து அமித்ஷா பார்த்தார்
x
தினத்தந்தி 11 Aug 2019 11:55 PM GMT (Updated: 11 Aug 2019 11:55 PM GMT)

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி அமித்ஷா நேற்று விமானத்தில் பறந்து பார்வையிட்டார். உடன் சென்ற முதல்-மந்திரி எடியூரப்பா நிவாரண பணிகளுக்கு உடனடியாக ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் குறிப்பாக பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி மற்றும் தென் கர்நாடகத்தின் உள்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த மழை வெள்ளத்துக்கு 31 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த மழை பாதிப்புகளை முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஏற்கனவே ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பெலகாவிக்கு வந்தார். சிறப்பு விமானம் மூலம் பெலகாவி சாம்ரா விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதன் பிறகு அமித்ஷா, எடியூரப்பா ஆகியோர் ராணுவ விமானத்தில் பறந்து சென்று, கர்நாடகத்தில் உள்ள பெலகாவி, மராட்டியத்தில் கோலாப்பூர், சங்கலி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது மத்திய மந்திரிகள் பிரகலாத்ஜோஷி, சுரேஷ் அங்கடி ஆகியோரும் உடன் இருந்தனர். அதன் பிறகு சாம்ரா விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டத்தை அமித்ஷா நடத்தினார். இதில் எடியூரப்பா, மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை அமித்ஷா பார்வையிட்டார். மேலும் வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார். அப்போது எடியூரப்பா, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள், பாதிப்புகள் அவற்றுக்கு தேவையான நிதி உதவி குறித்து சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதன்பின்னர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், முதல்கட்ட ஆய்வின்படி கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கேட்டுள்ளேன். பாதிப்புகளை பார்க்கும்போது ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி வரை இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பது எனது கருத்து. முழுமையான ஆய்வுக்கு பிறகு இது தெரியவரும்.

மக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தான் அரசின் முதல் முன்னுரிமை ஆகும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. பயிர்களை இழந்த விவசாயிகள், வீடுகளை இழந்த மக்கள் ஆதங்கப்பட தேவை இல்லை. அவர்களுடன் அரசு உள்ளது. மழை பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, கர்நாடகத்திற்கான மத்திய அரசின் நிதி உதவியை அமித்ஷா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமித்ஷா தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அமித்ஷா வருகையையொட்டி பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நேற்று நடத்திய ஆய்வு குறித்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகம்(பெலகாவி), மராட்டிய மாநிலத்தில்(கோலாப்பூர், சங்கலி) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வானத்தில் விமானத்தில் பறந்து ஆய்வு செய்தேன். நிவாரண பணிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கஷ்டத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவிகள் செய்ய மத்திய-மாநில அரசுகள் முழுமையான அளவில் உறுதி பூண்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story