கூடலூர் அருகே நிலச்சரிவில் காணாமல் போன தொழிலாளியை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி


கூடலூர் அருகே நிலச்சரிவில் காணாமல் போன தொழிலாளியை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 5:55 PM GMT)

கூடலூர் அருகே நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன தொழிலாளியை மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் கூடலூர்-கேரளா செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி சீபுரம் பகுதியில் கடந்த 8-ந் தேதி மாலை 5 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது கூடலூர்-எல்லமலை சாலையில் நடந்து சென்ற எல்லமலை பகுதியை சேர்ந்த தொழிலாளி சைனூதீன் (வயது 47) நிலச்சரிவில் சிக்கினார்.

இதைத்தொடர்ந்து அவரை மீட்கும் பணியில் வருவாய், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். ஆனால் இதுவரை சைனூதீனை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் பொக்லின் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்ட பள்ளத்தாக்குகளில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து நேற்று 6-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. மோப்ப நாய் மில்டன் கொண்டு வரப்பட்டு போலீசார் பள்ளத்தாக்குகளில் இறங்கி தேடினர். மோப்ப நாய் அப்பகுதியில் பல இடங்களில் ஓடி சென்று மோப்பம் பிடித்தது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில் சைனூதீனை காணாததால் அவரது குடும்பத்தினர் தினமும் அப்பகுதிக்கு வந்து கண்ணீருடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து தேடுதல் குழுவினர் கூறியதாவது:-

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பல நாட்களாக சைனூதீனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மோப்ப நாய் மில்டன் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் முன்னேற்றம் இல்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story