மாவட்டத்தில், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. வழங்கினர்


மாவட்டத்தில், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டரிடம் மனு - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. வழங்கினர்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 8:06 PM GMT)

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஒட்டன்சத்திரம்,

மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி இ.பெரியசாமி எம்.எல்.ஏ., அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி ஆகிய ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டன.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகளும் (வடகாடு ஊராட்சி நீங்கலாக), தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளும், வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை மற்றும் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரத்தில் 201 குடியிருப்புகள் ஆகிய பகுதிகள் பயனடையும் வகையில் 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வேடசந்தூர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் மூலம் எந்த பகுதிக்கும் குடிநீர் சென்றடையவில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி ஒட்டன்சத்திரம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

2010-ம் ஆண்டு கொத்தயம் நல்லதங்காள் அணையை தூர்வாரி கரையை பலப்படுத்தி தண்ணீர் தேக்குவதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2011-ம் ஆண்டில் 90 சதவீத பணிகள் முடிவுற்றிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை மழைக்காலத்திற்குள் விரைந்து முடித்து தண்ணீரை தேக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகள் அந்தந்த பகுதியில் அமைக்காமல், நீண்ட தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்தந்த பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும்.

வேடசந்தூர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அரசப்பபிள்ளைபட்டி முதல் சத்திரப்பட்டி வரை குடிநீர் குழாய்கள் மிகவும் சேதமடைந்து விட்டது. இந்த குடிநீர் குழாய்களை மாற்றம் செய்தால் அரசப்பபிள்ளைபட்டி, சத்திரப்பட்டி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள சுமார் 10 ஊராட்சிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கு கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து நிதி ஒதுக்கி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படும் கண்வலி கிழங்கு விதைகள் மருத்துவ பயன்பாட்டிற்காக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விதைகளை வேளாண் விற்பனைத்துறையின் மூலமாக அரசு நேரடியாக கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்தால் விவசாயிகள் அதிகளவில் பயனடைவார்கள்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

Next Story