மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளம் விவசாயி கைது


மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளம் விவசாயி கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:40 PM GMT (Updated: 13 Aug 2019 10:40 PM GMT)

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மடத்துக்குளம்,

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மடத்துக்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. கட்டுப்பாட்டு அறையில் உள்ள அவசர உதவி எண் 100-க்கு நேற்று முன்தினம் இரவு 10:19 மணிக்கு ஒரு அழைப்பு சென்றுள்ளது. அந்த அழைப்பை ஏற்று போலீ்ஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த போலீசார் பேசியபோது எதிர்முனையில் பேசிய ஆசாமி, தன்னை யார் என்று அடையாளம் கூறாமல் 13-ந் தேதி அன்று (நேற்று) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது வெடிகுண்டு வைத்து விடுவதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த அழைப்பு எங்கிருந்து பேசப்பட்டது என்று கண்டறியும்போது, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப்பட்ட செல்போன் எண் யாருடையது என விசாரித்தனர்.

விசாரணையில் அந்த செல்போன் மடத்துக்குளம் தாலுகா துங்காவி கிராமம் சீலநாயக்கன்பட்டி தோட்டத்துச்சாலை தெய்வாத்தாள் (வயது 65) என்பவருக்கு சொந்தமானது என்றும், சம்பவத்தன்று அவருடய மகன் குமாரவேல் என்கிற சிவக்குமார் (41) வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கணியூர் போலீசார், குமாரவேல் மீது இந்திய தண்டனை சட்டம் 504, 507 மற்றும் 506-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை மாஜூஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.விவசாயியான குமாரவேல் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். விவசாயி ஒருவர் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story