சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 11:02 PM GMT)

சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் அதிநவீன படகில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

கடலூர் முதுநகர்,

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாளை(வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி ஆண்டுதோறும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று முன்தினமே தொடங்கி விட்டன.

கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. மோப்பநாய்கள் மூலமும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ரெயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி கோட்ட ரெயில்வே கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உத்தரவின்பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று காலை தண்டவாள பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

கடலோர பாதுகாப்புபடை குழும போலீசார் அதிநவீன படகில் கிள்ளை முதல் மரக்காணம் வரை சென்று கடலில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்களிடம் விசாரித்தனர். மேலும், அன்னிய நபர்கள் யாரேனும் வந்தாலோ? அல்லது மர்மபடகு வந்தாலோ? உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த கண்காணிப்பு பணி நாளை இரவு வரை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story