பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்


பெருநாவலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 5:31 PM GMT)

பெருநாவலூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அடுத்து பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை என இரு பிரிவுகளாக பயின்று வருகிறார்கள். 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கி நடை பெற்று வருகிறது. கடந்த கல்வி ஆண்டு வரை பாரதி தாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியாக செயல்பட்டு வந்த இந்த கல்லூரி, இந்த கல்வி ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மாணவர்கள் போராட்டம்

தற்போது புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி (பொறுப்பு )முதல்வராக பெருநாவலூர் அரசு கல்லூரியை கூடுதலாக கவனித்து வருகிறார். அதே நேரம் இந்த கல்வி ஆண்டு வகுப்புகள் தொடங்கியதில் இருந்து பேராசிரியர்கள் பற்றாக்குறையால் 5 மணி நேரம் நடக்கும் வகுப்புகள், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் தான் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இதனால் எங்கள் படிப்பு வீணாகிறது. தினமும் கல்லூரிக்கு வருவதும், போவதுமாக படிக்க முடியாமல் வீணாகிறது. இதனால் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பாடம் நடத்த பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று நேற்று காலை பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவு மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போதுமான பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் சொல்லி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story