சுதந்திர தின விழாவையொட்டி, அணைகள்- வழிபாட்டு தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு


சுதந்திர தின விழாவையொட்டி, அணைகள்- வழிபாட்டு தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 7:52 PM GMT)

சுதந்திர தின விழாவையொட்டி அணைகள், வழிபாட்டு தலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

தேனி,

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (வியாழக் கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் அணைகள், வழிபாட்டு தலங் களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை போன்ற அணைகளிலும், முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பஸ் நிலையங்கள், கடை வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வைகை அணை உள்ளிட்ட அணைகள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் வெடி குண்டுகள் கண்டறியும் நவீன கருவிகள் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. இதுமட்டுமின்றி பஸ் நிலையங்களில் சந்தேக நபர்களின் உடைமைகளையும் சோதனையிட்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள நபர்கள் முறையான முகவரி சான்று கொடுத்து அறை எடுத்து தங்கி இருக்கிறார்களா? என்று ஆய்வு செய்தனர். சோதனை சாவடிகளில் நேற்று வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

தமிழக-கேரள மாநில எல்லையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய இடங்களில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதேபோல், ஆண்டிப்பட்டி அருகே கணவாய், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக் குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இரவு முதல் அதிகாலை வரை தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

Next Story