அன்னிய பொருட்களை புறக்கணித்தால் தான் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முடியும் வெள்ளையன் பேட்டி


அன்னிய பொருட்களை புறக்கணித்தால் தான் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முடியும் வெள்ளையன் பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2019 10:30 PM GMT (Updated: 14 Aug 2019 9:10 PM GMT)

உள்நாட்டு பொருட்களை வாங்குவோம் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் சுதேசி இயக்க பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலைக்கோட்டை,

சில்லரை வணிக உரிமைக்காக அன்னிய பொருட்களை புறக்கணிப்போம், உள்நாட்டு பொருட்களை வாங்குவோம் என்பதனை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் சுதேசி இயக்க பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பயண குழுவினர் நேற்று திருச்சி வந்தடைந்தனர். அவர்கள், மலைக்கோட்டை வாசலில் சுதேசி இயக்கத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் அன்னிய பொருட்களை புறக்கணிப்போம், இந்திய பொருட்களை வாங்குவோம், வங்கிகள், நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற சுதேசி பிரகடன கோஷம் எழுப்பினர். பின்னர் அனைவரும் சுதேசி பிரகடன உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் வணிகர் சங்க மாவட்டத்தலைவர் ரவி முத்துராஜா, செயலாளர் எஸ்.பி.பாபு, பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அன்னிய பொருட்களை புறக்கணித்தால் தான் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முடியும். வியாபாரம் செய்யவும், பொருட்களை தயாரிக்கவும் வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதித்து உள்நாட்டு வியாபாரத்தை மத்திய, மாநில அரசுகள் அழித்து விட்டன. இன்றைய ஆட்சியாளர்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரான கொள்கை, கோட்பாட்டில் இருந்து வெளிவர வேண்டும். மக்களை சார்ந்து செயல்படவேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சுதேசி கொள்கைக்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளும். அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த தினத்திற்குள் எந்தக்கடையிலும் வெளிநாட்டு பொருட்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மேலசிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


Next Story