சுதந்திர தினத்தில் உலக சாதனை முயற்சி: 7 ஆயிரம் சதுர அடியில் திருநங்கைகள் வரைந்த அம்பேத்கர் ஓவியம் தயாநிதி மாறன் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்


சுதந்திர தினத்தில் உலக சாதனை முயற்சி: 7 ஆயிரம் சதுர அடியில் திருநங்கைகள் வரைந்த அம்பேத்கர் ஓவியம் தயாநிதி மாறன் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்
x
தினத்தந்தி 15 Aug 2019 11:00 PM GMT (Updated: 15 Aug 2019 9:00 PM GMT)

சமூக நல அமைப்பு சார்பில் உலக சாதனை முயற்சியாக 7 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் உருவ ஓவியம் வரையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோபாலபுரத்தில் தன்னம்பிக்கை திருநங்கைகள் சமூக நல அமைப்பு சார்பில் உலக சாதனை முயற்சியாக 7 ஆயிரம் சதுர அடியில் அம்பேத்கர் உருவ ஓவியம் வரையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைப்பின் நிறுவனர் அனுஸ்ரீ தலைமையில் 100 திருநங்கைகள் ஒன்றிணைந்து அம்பேத்கர் உருவப்படத்தை தேசியகொடியுடன் இணைத்து வரைந்தனர்.

திருநங்கைகள் வரையும் அம்பேத்கர் ஓவியத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது திருநங்கைகளுக்கு தயாநிதி மாறன் எம்.பி. வாழ்த்து கூறினார். மேலும் ‘திருநங்கைகளின் நலன்-மேம்பாட்டுக்கு தி.மு.க. என்றும் துணைநிற்கும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கு நாடாளுமன்றத்தில் தி.மு.க. என்றுமே குரல் கொடுக்கும்’, என்றும் அவர் உறுதி அளித்தார்.

இதையடுத்து ‘வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு சார்பில் திருநங்கைகள் வரைந்த அம்பேத்கர் ஓவியம் உலக சாதனையாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து திருநங்கை அனுஸ்ரீ கூறுகையில், “பாலின சமத்துவத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கரின் பெருமையை போற்றும் வகையிலும், உலக சாதனை முயற்சியாகவும் திருநங்கைகள் ஒன்றிணைந்து இந்த ஓவியத்தை வரைந்தோம்”, என்றார்.

Next Story