ஆலங்குடி அருகே பட்டா இடத்தில் புதைக்கப்பட்டவரின் உடலை அகற்றக்கோரி சாலை மறியல்


ஆலங்குடி அருகே பட்டா இடத்தில் புதைக்கப்பட்டவரின் உடலை அகற்றக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 7:57 PM GMT)

ஆலங்குடி அருகே நம்பன்பட்டியில் பட்டா இடத்தில் புதைக்கப்பட்டவரின் உடலை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆலங்குடி,

காத்தான் விடுதியை சேர்ந்த பிச்சையம் பதீஸ்வரர் என்பவர் கடந்த 8-ந்தேதி இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அடக்கம் செய்யும் சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல், நம்பன்பட்டியை சேர்ந்த ரெங்கசாமி மனைவி சுந்தரம்பாளுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்தனர். இதை தடுத்த சுந்தரம்பாள் மகன் அர்ச்சுணனை சிலர் தாக்கினர். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சுந்தரம்பாளின் உறவினர்கள் மற்றும் நம்பன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் காத்தான் விடுதி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பிச்சை உறவினர்கள் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ள இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றனர். இதைத்தொடர்ந்து கறம்பக்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆவணங்களின் அடிப்படையில் பிரச்சினைக்குரிய இடம் சுந்தரம்பாளுக்கு சொந்தமான பட்டா இடம் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்ட உடலை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் 11 நாட்கள் ஆகியும் உடலை அப்புறப்படுத்தாததை கண்டித்து சுந்தரம்பாளின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலங்குடிசம்பட்டி விடுதி சாலையில் உள்ள நம்பன்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ஜேம்ஸ் வில்லியம், வருவாய் ஆய்வாளர் சசிக்குமார், கிராம நிர்வாக அதிகாரி உதயசூரியன், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

அப்போது அதிகாரிகள் 3 முதல் 5 நாட்களுக்குள் புதைக்கப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், அர்ச்சுணனை தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும், பட்டா இடத்தில் உடலை புதைத்தவர்கள் மீது மேல்நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிஅளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஆலங்குடிசம்பட்டி விடுதி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story