முதியவர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது


முதியவர் கொலை வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 3:45 AM IST (Updated: 21 Aug 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே நடந்த முதியவர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது68). விவசாய தொழிலாளி. இவருடைய வீட்டின் முன்பு சம்பவத்தன்று இரவு அதே தெருவை சேர்ந்த புலவேந்திரன் மகன் கட்டை என்கிற பிரகாஷ்(26), செல்வம் மகன் செரலாக் என்கிற பிரகாஷ் (27) ஆகிய 2 பேரும் செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தனர்.

அதை பார்த்த ரத்தினம் வீட்டின் முன்பு நின்று ஏன் செல்போன் பேசுகிறீர்கள்? இங்கிருந்து செல்லுங்கள் என 2 பேரிடமும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ரத்தினத்தை கீழே தள்ளிவிட்டனர்.

2 பேர் கைது

கீழே விழுந்ததில் ரத்தினத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரத்தினம் மகன் ராமச்சந்திரன் சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டை என்கிற பிரகாஷ், செரலாக் என்கிற பிரகாஷ் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் அதே பகுதியில் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story