திருப்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை


திருப்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2019 4:45 AM IST (Updated: 25 Aug 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் கொலைவழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாகராஜன் நகரைச்சேர்ந்தவர் அப்துல்ரஜாக் மகன் சிராஜ்தீன் (வயது 35). மீன்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கரூர் அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்த ராஜாமுகமது மனைவி ஜாஸ்மின் ரெகானா (25). இவருக்கும் சிராஜ்தீனுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர்.

ராஜாமுகமது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை மனைவிக்கு அனுப்பி உள்ளார். இந்தநிலையில் ஜாஸ்மின் ரெகானாவிடமிருந்து பணம் மற்றும் நகைகளை சிராஜ்தீன் வாங்கி செலவழித்து விட்டாராம். தனது கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வர உள்ளதால், தனது பணம், நகைகளை கேட்டுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் ஜாஸ்மின் ரெகானா தனது பணம், நகைகளை கேட்டதால் ஆத்திரம் அடைந்த சிராஜ்தீன், ஜாஸ்மின் ரெகானாவை கொலை செய்தார். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டதால், வழக்கில் உடனடியாக தனக்கு எதிராக தீர்ப்பு வந்து தண்டனை வழங்கப்படும் என்று சிராஜ்தீன் நினைத்து வந்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அவர் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிராஜ்தீன் இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story