ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பனந்தாள் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பந்தநல்லூர் கிராமத்தில் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அகழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பசுபதீஸ்வரர் கோவிலில் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்தபோது, அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு, 4 வாரங்களுக்கு அப்பகுதியில் பட்டா உள்ளவர்களின் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட கூடாது என கடந்த 7-ந் தேதி உத்தரவிட்டது.

சாலை மறியல்

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவதற்காக நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் 4 பொக்லின் எந்திரங்களுடன் அங்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் 20 நிமிடங்கள் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story