விழுப்புரம் பகுதிகளில், விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்


விழுப்புரம் பகுதிகளில், விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 25 Aug 2019 5:28 PM GMT)

விழுப்புரம் பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்,

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 2-ம் தேதி (திங்கட்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டின் அனைத்து நகரம் மற்றும் கிராமங்களிலும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர்.இதையொ ட்டி கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் விழுப்புரம் அருகே அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு, சிந்தாமணி, வளவனூர், திருவாமாத்தூர், பனையபுரம், மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், பாகுபலி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், குபேந்திரருடன் இருக்கும் விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பலவித கலை நயத்துடன், பல்வேறு வடிவங்களில் 2 அடி முதல் 13 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மழை காரணமாக சிலை செய்யும் பணி பாதிக்கப்பட்டது. தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சில நாட்கள் உள்ளதால் சிலைக்கு வர்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், ரசாயன பொருட்களை கலக்காமலும், நீர் நிலைகளில் கரையும் தன்மையுள்ள சிலைகளை தயாரித்து வர்ணம் பூசி வருகிறோம்.

விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் சிலைகள் கேட்டு ஆர்டர் கொடுத்து வருகின்றனர். மூலபொருட்கள், மின்கட்டணம், தொழிலாளர்கள் கூலி அதிகரிப்பு காரணமாக தற்போது விலை சற்று உயர்ந்துள்ளது.

மேலும் இங்கு தயாராகும் விநாயகர் சிலைகள் இன்னும் ஓரிரு நாட்களில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டத்திற்கு அனுப்பும் பணி தொடங்கும் என்றார்.

Next Story