ராமநகரில், ஜனதாதளம்(எஸ்) கட்சி பெண் பிரமுகர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள், பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ராமநகரில், ஜனதாதளம்(எஸ்) கட்சி பெண் பிரமுகர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள், பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Aug 2019 9:30 PM GMT (Updated: 25 Aug 2019 8:45 PM GMT)

ராமநகரில், ஜனதா தளம்(எஸ்) கட்சி பெண் பிரமுகர் வீட்டில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ராமநகர், 

ராமநகரில், ஜனதா தளம்(எஸ்) கட்சி பெண் பிரமுகர் வீட்டில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர்

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா பிரசாந்த்நகரை சேர்ந்தவர் நாகரத்னா. இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகர் ஆவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டுக்கதவை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தில், யாரோ மர்ம நபர்கள் நாகரத்னாவின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் திருப்பதியில் இருந்து நாகரத்னா தனது குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 கிலோ 300 கிராம் தங்க நகைகள், ரூ.73 ஆயிரம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தது நாகரத்னாவுக்கு தெரியவந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர் உடனடியாக இதுபற்றி கனகபுரா டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரூ.1 கோடி மதிப்பு

உடனே மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று கனகபுரா டவுன் போலீசார் விசாரித்தனர். நாகரத்னாவின் வீட்டில் மோப்பம் பிடித்த நாய், சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. அவரது வீட்டில் பதிந்திருந்த மர்மநபர்களின் ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில், கொள்ளை போன நகைகள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று தெரியவந்தது.

இதுகுறித்து கனகபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் கனகபுராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story