வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 28 பேர் கைது


வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 28 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் நடந்த விபத்து தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் ஒரு ஜீப்புக்கு தீ வைத்ததோடு, அங்குள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்துக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்தும், சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம் முன் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

28 பேர் கைது

இந்த போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயன் மற்றும் நிர்வாகிகள் மேசியா, ராஜன், ஜாண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அண்ணா பஸ் நிலையத்துக்குள் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் பஸ் நிலையம் முன் உள்ள சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் 28 பேர் கைது செய்யப்பட்டு வடிவீஸ்வரத்தில் உள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story