கன்னியாகுமரியில் துணிகரம் அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை


கன்னியாகுமரியில் துணிகரம் அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 30 Aug 2019 4:30 AM IST (Updated: 30 Aug 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரிஅம்மன் கோவிலில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி தெற்குகுண்டல் சுனாமி காலனியில் ராஜராஜேசுவரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் கோவில் பூசாரி ரகுபாலன் (வயது 48) பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலையில் ரகுபாலன் தன்னுடைய மனைவி ராமலட்சுமியுடன் கோவிலை சுத்தம் செய்ய வந்தார். அப்போது கோவிலின் கதவும், கோவிலின் கருவறை கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைகண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நகைகள் கொள்ளை

பின்னர் கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த வைரக்கல் மூக்குத்தி, தங்க கம்மல் போன்றவை கொள்ளை போய் இருந்தது. அங்குள்ள அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிவிக்கப்படும் 10 பவுன் நகைகளும் திருட்டு போய் இருந்தது.

கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளை போய் இருந்தது. இதுபற்றி ரகுபாலன், கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விசாரணையில், கோவில் உண்டியலில் ரூ.30 ஆயிரம் வரை இருந்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பலசரக்கு கடை

இதேபோல், அதே பகுதியில் முத்துசாமி என்பவரது பலசரக்கு கடையிலும் நேற்று முன்தினம் இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது கடையின் கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கன்னியாகுமரியில் கோவில் மற்றும் கடையில் அடுத்தடுத்து நடந்த இந்த துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story