விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக் கோரி முக்குலத்துப்புலிகள் அமைப்பினர் சாலை மறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக் கோரி முக்குலத்துப்புலிகள் அமைப்பினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:30 AM IST (Updated: 1 Sept 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட முக்குலத்துப்புலிகள் அமைப்பை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அகில இந்திய முக்குலத்தோர் பேரவை தலைவர் சரவணன் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட முக்குலத்துப்புலிகள் அமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

முக்குலத்துப்புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணனை இரவோடு, இரவாக கைது செய்த போலீசாரை கண்டித்தும், வேதாரண்யம் கலவரத்துக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், போலீஸ் நிலையத்தை தாக்கி, வாகனத்தை எரித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வற்புறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாலை மறியல்

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென காந்திசாலையின் குறுக்கே நின்று கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே மேற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனால் இதை அவர்கள் கேட்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் முக்குலத்துப்புலிகள் அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து மினி பஸ்சில் ஏற்றி சென்றனர். மொத்தம் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 16 பேர் கைது

இதையடுத்து முக்குலத்துப்புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் தஞ்சை ரெயில்வே கீழ்பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரெயிலடிக்கு வந்தனர். அங்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த இவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story