பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைப்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 11:00 PM GMT (Updated: 4 Sep 2019 8:27 PM GMT)

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

விழுப்புரம்,

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2-ந் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 2,601 இடங்களில் 4 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர சிறிய அளவிலான விநாயகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது மற்றும் 5-வது, 7-வது நாட்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏரி, குளம், கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

அதன்படி விழுப்புரம் நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 3-வது நாளான நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் கரைப்பதற்காக டிராக்டர், மினி லாரி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

மாலை 2.30 மணியளவில் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் விழுப்புரம் நகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தனித்தனியாக வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் திருவெண்ணெய்நல்லூர், அரசூர் பகுதிகளில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளும் அங்கிருந்து வாகனங்களில் ஊர்வலமாக விழுப்புரம் கொண்டு வரப்பட்டு பின்னர் கடலூருக்கு புறப்பட்டது.

ஊர்வலமாக சென்ற வாகனங்களுக்கு முன்னால் இளைஞர்கள் ஏராளமானோர் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தில் வண்ண பொடிகளை பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இந்த ஊர்வலம் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மகாத்மாகாந்தி சாலை, காமராஜர் வீதி, மேல்தெரு, வடக்கு தெரு, திரு.வி.க. வீதி, கிழக்கு புதுச்சேரி சாலை வழியாக கடலூருக்கு சென்றது. அப்போது வழிநெடுக பொதுமக்கள் தங்களது வீடுகளில் படைத்த சிறிய அளவிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கடலூருக்கு சென்ற வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

சிலைகள் ஊர்வலத்தையொட்டி வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகேசன், ராபின்சன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திண்டிவனம், ரோஷணை ஆகிய போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட 27 இடங்களில் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. சதுர்த்தி விழா முடிந்து 3-ம் நாளான நேற்று விநாயகர் சிலைகள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு திண்டிவனம் அங்காளம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு அங்கு விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை திண்டிவனம் ராம் டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது நேரு வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக மரக்காணம் கடற்கரையை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து 27 விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தில் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பாளர் சி.வி.பாபு, இந்து அமைப்பு பொறுப்பாளர் பிரபு, விழா குழு பொருளாளர் இளங்கோ, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் வினோத்குமார், நகர தலைவர் மணிமாறன், நிர்வாகிகள் தர்மலிங்கம், பட்டாபி, தினேஷ், நாகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை பகுதியில் பிரதிஷ்டைசெய்யப்பட்ட 48 விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் அங்குள்ள பேரூராட்சி அலுவலகம் முன்பு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மேள, தாளம் முழங்க அங்கிருந்து விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அப்பகுதியில் உள்ள ஏரிகளில் கரைத்தனர். மேல்மலையனூர், அவலூர்பேட்டை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 16 விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அந்தந்த பகுதிகளில் காவல்துறை அனுமதிக்கப்பட்ட ஏரி, குளங்களில் கரைக்கப்பட்டன. செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று ஒரே நாளில் 2,310 சிலைகள் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் கரைக்கப்படுகிறது. 

Next Story