நாமக்கல் அருகே, செல்போன் கோபுரம் அமைக்க பெண்கள் எதிர்ப்பு - சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு


நாமக்கல் அருகே, செல்போன் கோபுரம் அமைக்க பெண்கள் எதிர்ப்பு - சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Sep 2019 10:00 PM GMT (Updated: 7 Sep 2019 8:42 PM GMT)

நாமக்கல் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மைய பகுதியில், குடியிருப்புகளுக்கு இடையே தனியார் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று செல்போன் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், அங்கு திரண்டு வந்து பணியை நிறுத்த வலியுறுத்தி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாமக்கல் - சேந்தமங்கலம் பிரதான சாலையில் வேட்டாம்பாடி பஸ்நிறுத்தம் முன்பு அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் நேற்று மாலை நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story