பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பாரி போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பாரி போராட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 6:37 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அக்டோபர் 11-ந் தேதி ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட குழு கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்டகுழு உறுப்பினர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமே‌‌ஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில செயலாளர் பக்கிரிசாமி சிறப்புரையாற்றினார். வருகிற 28-ந் தேதி விவசாய தொழிலாளர் தலைவர் சீனிவாசராவ் பிறந்த நாளையொட்டி கிராமங்கள் தோறும் சங்க கொடி ஏற்றுவது என்றும், திருமாந்துறை- எறையூர் இடையே 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால், கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த விவசாயிகளிடம் ஒப்படைக்கக்கோரி வருகிற 30-ந் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நடத்தும் நிலமீட்பு போராட்டத்தில் சங்கத்தினர் கலந்து கொள்வார்கள்.

மாட்டு வண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன்...

தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை குறைக்கவேண்டும். 100 நாள் வேலை கேட்டும், அந்த வேலைத்திட்டத்தில் சட்டத்தின்படியான கூலி மற்றும் தகுதியான விவசாய தொழிலாளர்களுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரியும், மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கக்கோரியும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி சங்கம் சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்துவது. மாவட்ட வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக குன்னம் தாலுகா வெள்ளாற்றுப்படுகை மற்றும் வேப்பந்தட்டை தாலுகா கல்லாற்று படுகையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிச்செல்ல மணல் குவாரிகள் அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் 14-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கோவிந்தன், ரவி, தேவகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story