துறையூர் பகுதியில் கனமழை: கீரம்பூரில் 20 வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்


துறையூர் பகுதியில் கனமழை: கீரம்பூரில் 20 வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:30 AM IST (Updated: 15 Sept 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கீரம்பூரில் 20 வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

துறையூர்,

துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் துறையூர் அடுத்து உள்ள கீரம்பூர் ஊராட்சியில் முல்லை தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கழிவுநீரும் கலந்து வந்தது. இந்த கழிவுநீர் அப்பகுதியில் உள்ள 20 வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தார்கள். இரவு முழுவதும் வீட்டிற்குள் புகுந்த கழிவுநீரை அள்ளி ஊற்றி கொண்டிருந்தார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் விடிந்ததும் கீரம்பூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா, தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் மழைநீர், கழிவுநீர் செல்லும் வடிகாலை ஆக்கிரமித்து வீடுகட்டியதால்தான் மழைநீரும், கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள்.

அத்துடன் ஆக்கிரமிப்பை அகற்றினால்தான் மறியலை கைவிடுவோம் என்றும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story