சென்னை மாணவர் சிக்கிய விவகாரம்: ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய பல லட்சம் ரூபாய் கைமாறியது
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேருவதற்காக சென்னை மாணவருக்காக பல லட்சம் ரூபாய் கைமாறியதாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தேனி,
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கலந்தாய்வில் பங்கேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார், மாணவர் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் உதித்சூர்யாவை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர். ஆனால், அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவருடைய உறவினர்கள் வீடு, அவருடைய தந்தையின் நண்பர்கள் வீடுகளிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆள்மாறாட்ட சம்பவம் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்த தகவல் அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த புகாரின் பேரில் வெளியே தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மின்னஞ்சல் அனுப்பிய அசோக் கிருஷ்ணன் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவருக்கு எப்படி இந்த விவரம் தெரியவந்தது? அவர் ஏன் புகார் செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனால், அசோக் கிருஷ்ணன் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியை வைத்து, போலீசார் அந்த மின்னஞ்சல் எங்கு இருந்து அனுப்பப்பட்டது? என்றும், அனுப்பியவர் குறித்த தகவல்களையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாணவர் உதித்சூர்யா தேனி மருத்துவக்கல்லூரியில் படித்தபோது சக மாணவர்களிடம், தான் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரத்தை உளறியதாகவும், தன்னுடன் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் பேரில் உதித் சூர்யா தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அவருடன் அறையில் தங்கிய சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உதித் சூர்யா மும்பையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளார். அந்த தேர்வு மையத் தில் அவருடன் சேர்ந்து மேலும் பலர் பயிற்சி பெற்று தேர்வு எழுதியுள்ளனர். ஆள்மாறாட்டம் செய்வதற்கு பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்தார்களா? என்ற கோணத் திலும் விசாரணை நடந்து வருகிறது. இதனால், மும்பை பயிற்சி மையத்துக்கும் தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு பல லட்சம் ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. பயிற்சி மையம், சம்பந்தப்பட்ட தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் முதற்கொண்டு பலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மும்பையில் சம்பந்தப்பட்ட தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் விவரங்களை தனிப்படையினர் சேகரித்து வருகின்றனர். அதேபோல், தேர்வு முடிந்த பின்னர் நடந்த கலந்தாய்வில் உதித் சூர்யா தான் பங்கேற்றாரா? அல்லது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட நபர் பங்கேற்றாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதித்சூர்யா கலந்தாய்வில் பங்கேற்று இருந்தால் கலந்தாய்வு நடத்திய அதிகாரிகள் ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படத்துக்கும், உதித்சூர்யாவுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவில்லையா? அல்லது, கலந்தாய்வில் உதித் சூர்யா பங்கேற்காத பட்சத்தில் அவருடைய சான்றிதழ், அடையாள ஆவணங்கள் சரிபார்ப்பு பணியின் போது கோட்டை விட்டது ஏன்? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளும் எழுந்துள்ளன.
பலர் ஆள்மாறாட்டம் செய்து இருக்கலாம் என்று தகவல்கள் கூறப்பட்டு உள்ள நிலையில், இந்த சம்பவத்தில் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும், தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த வழக்கில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு நடத்திய தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story