ஆபாச வீடியோ இருப்பதாக கூறி திருப்பூர் பெண்ணிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்; சேலத்தை சேர்ந்த வாலிபர் கைது


ஆபாச வீடியோ இருப்பதாக கூறி திருப்பூர் பெண்ணிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்; சேலத்தை சேர்ந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2019 4:45 AM IST (Updated: 22 Sept 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோ இருப்பதாக கூறி திருப்பூர் பெண்ணிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய சேலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நல்லூர்,

திருப்பூர் மாநகர் மணியகாரம்பாளையம் காஞ்சிநகரை சேர்ந்த ஒரு தொழில் அதிபரின் 36 வயதான மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆசாமி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினான். அப்போது அந்த ஆசாமி, அந்த பெண்ணிடம் உங்களது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் என்னிடம் இருப்பதாகவும், அதை இணைய தளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது கணவரிடம் மர்ம ஆசாமி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து கூறினார். இதையடுத்து அந்த தொழில் அதிபர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாரிடம் புகார் தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் இந்த வழக்கை விசாரித்து சம்பந்தப்பட்டவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் ஊரக போலீசார் இந்த புகார் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் தனிப்படையினர் தொழில் அதிபரின் மனைவியிடம், மீண்டும் மர்ம ஆசாமி பணம் கேட்டு செல்போனில் தொடர்பு கொண்டால், பணம் தருவதாக கூறி திருப்பூருக்கு வரவழைக்கும்படி கூறி உள்ளனர்.

இந்த நிலையில் தொழில் அதிபரின் மனைவிக்கு செல்போனில் வந்த அந்த மர்ம ஆசாமி, பணம் ரெடியாகி விட்டதா? இல்லை ஆபாச வீடியோக்களை இணைய தளத்தில் வெளியிடவா?என மிரட்டி இருக்கிறார். இதையடுத்து தொழில் அதிபரின் மனைவி, பணம் தருகிறேன். அந்த வீடியோக்களை என்னிடம் கொடுத்து விடு. திருப்பூர் வந்து பணத்தை பெற்று செல் என்று கூறி இருக்கிறார்.

அந்த ஆசாமியும் தொழில் அதிபரின் மனைவி, தன்னுடைய மிரட்டலுக்கு பயந்து பணத்தை தருவதாக கூறி விட்டார் என நினைத்து உள்ளார். தொழில் அதிபர் மனைவி குறிப்பிட்டப்படி அந்த மர்ம ஆசாமி திருப்பூர் வந்தார். திருப்பூர் காங்கேயம் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி அருகே அந்த மர்ம ஆசாமி நின்றிருந்தார்.

இதற்கிடையே திருப்பூர் தனிப்படை போலீசார், தனியார் பள்ளி அருகே நின்றிருந்த அந்த ஆசாமியை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சிவசங்கர் மகன் நரேஷ்(வயது 27) என்பதும், ஐ.டி.ஐ.படித்து விட்டு வேலை கிடைக்காததால் முகநூலில் பதிவு செய்யப்பட்டு இருந்த செல்போன் எண்கள் மூலமாக வசதியான பெண்களா? என அவர்களது பதிவு விவரத்தை அறிந்து மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தது தெரிய வந்தது. ஆபாசமாக வீடியோ இருப்பதாக பொய் தகவலை கூறி பணத்தை பறிக்க திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து நரேஷை போலீசார் கைது செய்தனர். இது போன்று வேறு எந்த பெண்ணிடமாவது ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறி பணம் பறித்து உள்ளாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story