திண்டுக்கல் அருகே, குளம் தூர்வாரும் பணியில் போலீசார் - லத்தியை சுழற்றிய கையில் மண்வெட்டி பிடித்தனர்
திண்டுக்கல் அருகே குளத்தை தூர்வாரும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது லத்தியை சுழற்றிய கையில் மண்வெட்டி பிடித்து வேலை செய்தனர்.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்மூலம் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் பணி நடக்கிறது. அரசு நிதிஉதவி மற்றும் விவசாயிகளின் பங்களிப்புடன் தூர்வாரும் பணி நடக்கிறது. அதேபோல் ஒவ்வொரு துறையினரும் நீர்நிலைகளை தூர்வாரும் வகையில், மாவட்டம் வாரியாக குளங்கள் ஒதுக்கப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு, திண்டுக்கல் அருகேயுள்ள சீலப்பாடி ஊராட்சியில் பாலகுருவப்பநாயக்கர்குளம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த குளத்தில் தூர்வாரும் பணியை நேற்று போலீசார் தொடங்கினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். துணை சூப்பிரண்டுகள் ஆனந்தராஜ், மணிமாறன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் உள்பட மொத்தம் 210 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் லத்தியை சுழற்றிய கையில், மண்வெட்டி பிடித்து குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குளத்தின் மேடான பகுதியில் இருந்த மண்ணை வெட்டி எடுத்தனர். பின்னர் மண்ணை சுமந்து சென்று குளத்தின் கரையில் போட்டு, அதை பலப்படுத்தினர்.
அதேபோல் சேதமான குளத்தின் கரை மற்றும் வரத்து கால்வாய், மதகுகளை சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டனர். இதில் பெண் போலீசாரும் ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. குளம் தூர்வாரும் பணி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடைபெறு கிறது.
Related Tags :
Next Story