சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை-ஆர்ப்பாட்டம்


சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி, 

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 7 வயது சிறுமி உள்ளாள். அந்த சிறுமி வாய் பேச முடியாத நிலையிலும் உள்ளாள். இந்த சிறுமி தேனியில் உள்ள ஒரு மனநல காப்பகத்துக்கு தினமும் ஆட்டோவில் அழைத்துச்செல்லப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 19-ந்தேதி அந்த சிறுமி ஒரு ஆட்டோவில் காப்பகத்துக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தாள்.

வீட்டுக்கு வந்த நிலையில், சிறுமிக்கு அவருடைய தாயார் உடை மாற்றியபோது அவளுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. பின்னர் அந்த சிறுமி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையறிந்து சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தேனி அனைத்து மகளிர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெண்கள் விடுதலை கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை விரைவில் கைது செய்ய வலியுறுத்தியும், தற்போது வரை நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமாரிடம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.

பின்னர், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story