கள்ளப்பெரம்பூர் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி


கள்ளப்பெரம்பூர் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

பூதலூர் அருகே 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட கள்ளப்பெரம்பூர் ஏரியில் தண்ணீர் நிரம்பியது.

திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர்-தஞ்சை சாலையில் உள்ளது செங்கழுநீர்ஏரி என்கிற கள்ளப்பெரம்பூர் ஏரி. 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு வெண்ணாற்றில் பிரிந்து செல்லும் ஆனந்தகாவிரி வாய்க்கால் வழியாக தண்ணீர் கிடைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்தால் கல்விராயன்பேட்டை அருகே புதுஆற்றில் உள்ள கீழ்ப்பாலம் (சைபன்) வழியாகவும் கள்ளப்பெரம்பூர் ஏரியை தண்ணீர் வந்தடையும்.

கள்ளப்பெரம்பூர் ஏரியின் தண்ணீரை கொண்டு கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த 2004-ம் ஆண்டு ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடந்தன.

முட்புதர்கள் அகற்றம்

அப்போது ஏரியை முறையாக ஆழப்படுத்தவும், கரைகள் மற்றும் மதகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டும் கள்ளப்பெரம்பூர் ஏரியை தூர்வார அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கள்ளப்பெரம்பூர் ஏரியில் வளர்ந்திருந்த முட்புதர்களை அகற்றினர்.

இந்த நிலையில் கள்ளப்பெரம்பூர் ஏரிக்கு பாசன ஆதாரமாக விளங்கும் ஆனந்தகாவிரி வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஆனந்தகாவிரி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கள்ளப்பெரம்பூர் ஏரியை சென்றடைந்தது. இதனிடையே மழையும் பெய்ததால் தற்போது கள்ளப்பெரம்பூர் ஏரி முழுமையாக நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

வடிகாலில் வழிந்தோடும் தண்ணீர்

ஏரி நிரம்பி உள்ளதால் ஏரியின் கிழக்கு கரையில் உள்ள வடிகால் வழியாக தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இதனால் ஆனந்த காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டு வெண்ணாற்றில் விடப்படுகிறது.

ஏரி நிரம்பி இருப்பது கள்ளப்பெரம்பூர் ஏரியின் மூலம் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது அந்த பகுதியில் நாற்றங்கால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டில் கள்ளப்பெரம்பூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story