சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2019 11:00 PM GMT (Updated: 23 Sep 2019 8:55 PM GMT)

எலச்சிபாளையம் அருகே, நோயாளிகளிடம் தரக்குறைவாக பேசும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எலச்சிபாளையம்,

எலச்சிபாளையம், சந்தப்பேட்டை, கொன்னையார், சின்ன எலச்சிபாளையம், சமத்துவபுரம், அகரம், கொத்தம்பாளையம், கிளாப்பாளையம், வேலங்காடு, அத்திமரப்பட்டி, இலுப்புலி என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் இருந்து சுமார் 200-ல் இருந்து 300 பேர் வரை எலச்சிபாளையம் இலுப்புலி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு தினமும் நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் 4 கிராம செவிலியர்கள் உள்பட 12 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

முற்றுகை போராட்டம்

இதில் செவிலியர் ஒருவர் நோயாளிகளிடம் தரக்குறைவாக பேசி வருகிறார் என்றும், மேலும் அவர் உரிய நேரத்தில் ஊசி போடாமல் நோயாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இரவு நேரங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவரை நியமிக்கவேண்டும், 24 மணி நேரமும் ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

பின்னர் ஆரம்ப துணை சுகாதார நிலைய மருத்துவர் கருணாகரனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் ஒப்புதல் அளித்த பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில், ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், கிளை செயலாளர்கள் சத்யா, கிட்டுசாமி உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story