சங்ககிரி அருகே பரபரப்பு: மாமியார் கழுத்தை நெரித்து கொலை - லாரி டிரைவர் வெறிச்செயல்


சங்ககிரி அருகே பரபரப்பு: மாமியார் கழுத்தை நெரித்து கொலை - லாரி டிரைவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 24 Sept 2019 3:41 AM IST (Updated: 24 Sept 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாக கூறி மாமியாரை லாரி டிரைவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்ககிரி,

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 55). இவருடைய மகள் தீபா(31). இவருக்கும், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் திருமணம் ஆகி, நந்திதா (11), சவுபர்னிகா(9) என்ற 2 மகள்களும் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் கணவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த 8 ஆண்டுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டார்.

இதையடுத்து தீபா, தனது குழந்தைகளுடன் புள்ளி பாளையத்தில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு வேலூர் தொரப்பாடியை சேர்ந்த லாரி டிரைவர் கணபதி(31) என்பவர் தீபாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளுடன் திருச்செங்கோடு அருகே புளியம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கணபதி மது அருந்தி விட்டு ஊதாரித்தனமாக சுற்றியதாக கூறி கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் திருச்செங்கோடு அருகே வெப்படையில் மில்வேலை பார்த்து வந்த தீபாவிடம் அடிக்கடி பணம் கேட்டு கணபதி துன்புறுத்தியதால் மனம் உடைந்த தீபா தனது தாயாரிடம் இது தொடர்பாக புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தீபா 2-வது கணவரையும் பிரிந்து தனது குழந்தைகளுடன் புள்ளிபாளையத்தில் உள்ள தாயார் பேபி வீட்டுக்கு மீண்டும் வந்து தங்கினார். பின்னர் அவர் வெப்படையில் உள்ள மில்லுக்கு தொடர்ந்து வேலைக்கு சென்றார். அவருடைய குழந்தைகள் திருச்செங்கோடு மற்றும் கருக்கம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் கணபதி, புள்ளி பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் வருமாறு அழைக்க வந்துள்ளதாக மாமியார் பேபியிடம் கூறி இருக்கிறார். அப்போது, ‘உன்னை திருமணம் செய்ததால் தான் எனது மகள் வாழ்க்கையே போய் விட்டது. உன்னோடு என் மகள் எந்த காலத்திலும் சேர்ந்து வாழ வரமாட்டாள்’ என்று ஆத்திரத்துடன் அவர் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கணபதி, உன்னை தீர்த்து கட்டினால் தான் நான் எனது மனைவியுடன் சேர்ந்து வாழ முடியும் என்று மாமியாருக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர் வீட்டுக்கு வந்த மகள் தீபாவிடம் நடந்த விவரங்களை பேபி கூறி உள்ளார். அதை பொருட்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டு தீபா நேற்று முன்தினம் இரவு மில்வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் பேபியும், அவருடைய பேத்திகளும் மட்டும் தூங்கி கொண்டிருந்தனர்.

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கணபதி, மாமியார் பேபியின் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கதவை தட்டியவுடன் பேபி கதவை திறந்துள்ளார். அப்போது பேபியை தள்ளிவிட்டு வீட்டுக்குள் சென்ற கணபதி, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து வெளிப்பக்கமாக பூட்டு போட்டார். அப்போது அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு அங்கு வந்தனர். உடனே அங்கிருந்து கணபதி தப்பிச்சென்று விட்டார்.

பின்னர் அங்கு வந்தவர்கள் கதவை திறந்து பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பேபி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவருடைய மகள் தீபாவுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த தீபா, தனது தாயார் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து சங்ககிரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணபதியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மாமியாரை, மருமகனே கழுத்தை நெரித்து கொன்ற வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story