ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய - கஞ்சா வியாபாரி உள்பட 4 பேர் கைது
ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய கஞ்சா வியாபாரி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியை அடுத்த புளியம்பட்டி நாராயணசாமிநாயுடு நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜயபுரத்தில் ஒரு தனியார் மில்லுக்கு செல்லும் ரோட்டில் கடந்த 20-ந் தேதி இரவு முருகேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் முருகேசனுக்கு தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனை, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல்சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் புளியம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான மணிகண்டன் உள்ளிட்ட சிலர் முருகேசனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் ஊஞ்சவேலாம்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மணிகண்டனை பிடித்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் புளியம்பட்டி வாய்க்கால் மேட்டில் பதுங்கி இருந்த கலைஞர் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (24), தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்த பிரபாகரன் (25), விஜயபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு தங்கமணி கணேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
இதற்கிடையில் மணிகண்டன் போலீசில் அளித்த வாக்குமுலத்தில் கூறியிருப்பதாவது:-
முருகேசன் ஓட்டலில் வைத்து சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார். அவரிடம் நான் மதுபாட்டில்களை விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தேன். பின்னர் தனியாக சென்று மதுபாட்டில்களை விற்பனை செய்தேன். இதனால் முருகேசனுடன் தகராறு ஏற்பட்ட போது என்னை மிரட்டினார். இதனால் முருகேசன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்த நிலையில் எனது பெரியப்பா பஞ்சுபாண்டி புறம்போக்கு இடத்தில் சிறியதாக கடை போட்டு வியாபாரம் செய்து வந்தார். அவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாக முருகேசன் பேசி வந்தார். இதன் காரணமாக முருகேசன் மீது மேலும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். கடந்த 20-ந்தேதி புளியம்பட்டியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி முருகேசன் வருவதை அறிந்து எனது நண்பர்களுடன் சென்று அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றேன். ஊஞ்சவேலாம்பட்டியில் வைத்து போலீசார் என்னை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story