ஒரத்தநாடு அருகே தற்காலிக பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


ஒரத்தநாடு அருகே தற்காலிக பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 27 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே புதிய பாலம் கட்டும் இடத்தின் அருகே தற்காலிக பாலம் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் நெய்வாசல் ஊராட்சி அரசப்பட்டு கிராமத்தில் வடவாற்றின் குறுக்கே ஊசிக்கண் பாலம் இருந்தது. இந்த பாலம் பழுதடைந்து வலுவிழந்து காணப்பட்டதால் அங்கு புதிய பாலம் கட்டும் பணியை தொடங்கு வதற்கு ஏதுவாக பழைய பாலத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு தற்காலிக பாலம் அமைத்து போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும் என்றும், தற்காலிக பாலம் அமைக்கப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமப்படுவதாக கூறி தற்காலிக பாலத்தை உடனே அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தபோவதாக கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சாலை மறியல்

இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்நேற்று காலை தஞ்சை-மன்னார்குடி சாலையில் நெய்வாசல் கடைத்தெரு அருகே மறியலில் ஈடுபட்டனர். அப்போது தற்காலிக பாலம் அமைத்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு காமராசு, ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ், தஞ்சாவூர், நபார்டு திட்டம் மற்றும் கிராம சாலைகள் கோட்டப் பொறியாளர் கலைவாணி,போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தற்காலிக பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்கி விரைவாக போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கியிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக தஞ்சை- மன்னார்குடி சாலையில் அரைமணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story