அ.தி.மு.க. ஆட்சியை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
‘தி.மு.க. ஆட்சியில் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. அ.தி.மு.க. ஆட்சியை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நெய்காரப்பட்டி பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் ராமன் வரவேற்றார். விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அவர் ரூ.5 கோடியே 21 லட்சம் மதிப்பில் 523 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ஏற்கனவே நான் நேரடியாக மனுக்களை பெற்றேன். தற்போது அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல் இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல், என்ன காரணத்திற்காக அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்பதை அவர்களுக்கு பதில் கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும். பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்கள் பெரும்பாலும் முதியோர் உதவித்தொகை, பட்டா ஆகியவை வேண்டி இருக்கின்றன.
இன்றைக்கு தமிழகம் முழுவதும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசால் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள், குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்ற ஒரு தவறான குற்றச்சாட்டை செல்கின்ற இடங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார்.
இந்த அரசு ஒவ்வொரு தொகுதியிலும் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு அரசாங்கம் ஒரு தொகுதியில் எவ்வளவு பணிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும், எதிர்க்கட்சியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில குறிப்புகளை இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.213 கோடியே 38 லட்சம் மதிப்பில் இந்த தொகுதியில் மட்டும் 29 ஆயிரத்து 531 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வருவாய்த்துறையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 8 ஆயிரத்து 360 பயனாளிகளுக்கு ரூ.85 கோடியே 27 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 35 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 81 லட்சம் மதிப்பில் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்களை அரசு எந்த அளவுக்கு விரைவாக, வேகமாக நிறைவேற்றி வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். ரூ.45 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை அரியானூர் சாலை சந்திப்பில் 8 வழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறையின் கீழ் 14 ஆயிரம் ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 26 ஆயிரம் ஏரிகளும் என தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏரிகளை ஒரே நேரத்தில் தூர்வார முடியாது. ஆகையால் இவைகளை படிப்படியாக தூர் வாரும் வகையில் குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, குறிப்பிட்ட ஏரிகளை குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை குறை கூறும் எதிர்க்கட்சியினர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து வருகிறது என்பதால் தூர்வாரவில்லை என்று குறை கூறுகிறார்கள்.
நான் வெளிநாடுகளுக்கு அரசுமுறை பயணம் சென்றுவிட்டு திரும்பிய போது, அடுத்து எந்த நாட்டிற்கு செல்ல இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு நான் அடுத்ததாக இஸ்ரேலுக்கு செல்ல உள்ளேன் என்று தெரிவித்தேன். அங்கு விவசாயிகள் இருக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல விளைச்சலை பெற்று வருகிறார்கள். குறைந்த நீரில், அதிக நிலப்பரப்பில் விவசாயம் செய்கிறார்கள். நம்முடைய பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பிற்கு விவசாயம் செய்ய பயன்படுத்தும் நீரை அங்கு 7 ஏக்கருக்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே, இதை பார்வையிடுவதற்காக நான் இஸ்ரேல் செல்ல உள்ளேன் என்று தெரிவித்தேன்.
இன்றைக்கு நகர பகுதியில் வெளியேறுகின்ற கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்து அருகில் இருக்க கூடிய ஏரியில் சேமித்து வைக்கின்ற போது அது நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயத்திற்கு பயன்படுகிறது. இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தை பார்வையிடுவதற்காக நான் இஸ்ரேல் செல்வேன் என்று சொன்னேன். உடனே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இங்கே காவிரியில் தண்ணீர் உபரியாக கடலில் கலக்கிறது இதையெல்லாம் சேமிக்க இயலாத முதல்-அமைச்சர் அங்கே போய் பார்வையிடுகிறார் என்று சொல்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை எத்தனை தடுப்பணைகள் கட்டினீர்கள்?.ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. எதுவுமே செய்யாத மு.க.ஸ்டாலின் எங்களை பற்றி (அ.தி.மு.க. அரசு) பேச எந்த தகுதியும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனி அமைப்பையே நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம்.
நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற பொறியாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் உபரியாக நீர் வீணாகின்றதோ? அதை எல்லாம் ஆய்வுப் பணி மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். மழைக்காலங்களில் கிடைக்கின்ற மழைநீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ஆதனூர் குமாரமங்கலம் என்ற இடத்தில் இந்த திட்டம் மேற்கொள்ள வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த பணி தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதைக்கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
மேட்டூரிலிருந்து கொள்ளிடம் வரை எந்த எந்த இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக கரூருக்கு அருகில் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 மாதத்தில் அந்த ஒப்பந்தம் போடப்பட்டு அந்த பணி தொடங்கப்படும். மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை 3 அல்லது 4 தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு 3 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான முல்லை -பெரியாறு பிரச்சினை, ஆழியாறு -பரம்பிகுளம் பிரச்சினை, பாண்டியாறு-புன்னம்புழா பிரச்சினை, செண்பகவல்லி அணை பிரச்சினை, நெய்யாறு பிரச்சினை இப்படி பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. எங்களுடைய மக்களுக்கு தண்ணீர் வேண்டும், விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று கேரள முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதினேன். நீங்கள் நேரில் வாருங்கள் இது குறித்து பேசுவோம் என்ற அழைப்பு விடுத்தார்கள்.
அந்த அழைப்பினை ஏற்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக முதல்-அமைச்சர் என்ற முறையில் கேரளாவிற்கு நானே நேரடியாக சென்று கேரள முதல்-மந்திரியை சந்தித்தேன். தமிழகத்திலேயே அதிக ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் பதவியில் இருந்த காலத்தில் முல்லை-பெரியாறு பிரச்சினையை முடித்திருக்கலாம். பாலாறு பிரச்சினையாவது தீர்த்திருக்கலாம். ஒன்றுமே செய்யாத நீங்கள் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. ஆனால் அவர் இந்த அரசு செயல்படுவது போல காட்டுவதற்காக கேரளாவிற்கு சென்று முதல்-அமைச்சரை சந்தித்தார் என்ற தோரணையில் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
ஒரு பிரச்சினை தீர்க்க வேண்டுமென்றால் குழு அமைத்து தான் தீர்க்க முடியும். ஆகவே, 2 மாநிலங்களிலுள்ள உயர் அதிகாரிகளின் மூலமாக குழுக்கள் அமைக்கப்படுகின்றது. 2 குழுக்களும் சந்தித்து பேசி நம்முடைய மாநிலத்தில் என்னென்ன பிரச்சினைகள், கேரளாவில் என்னென்ன பிரச்சினைகள் என்பதை கலந்து பேசி இறுதி வடிவம் கொடுக்கப்படும். ஆகவே, சுமார் 2 மாத காலத்தில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியை நாங்கள் எடுப்போம். ஆனைமலையாறு திட்டம் குறித்தும் கேரள முதல்-மந்திரியிடம் பேசி இருக்கிறோம். அதுவும் அந்த குழுவின் மூலமாக விசாரிக்கப்பட்டு ஒரு முடிவு காணப்படும். நிச்சயமாக நாங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும். ஆகவே அதை பற்றியெல்லாம் தி.மு.க. கவலைப்பட தேவையில்லை. உங்கள் ஆட்சியில் பதவியை மற்றும் அனுபவித்தீர்கள், மக்களை பற்றி கவலைப்படவில்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Related Tags :
Next Story