கடந்த 8 ஆண்டுகளில் 11¼ லட்சம் பெண்களுக்கு 5,260 கிலோ தங்கம் - எடப்பாடி பழனிசாமி தகவல்
திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 910 பெண்களுக்கு 5 ஆயிரத்து 260 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,
ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம், அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா நேற்று மாலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா தலைமை தாங்கினார்.
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அரசு செயலாளர் மதுமதி வரவேற்றார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கினார். மேலும் அவர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார்.
இதையடுத்து விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-
இந்த விழாவின் மூலம் ரூ.8 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 12 பணிகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் ரூ.30 கோடியே 62 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் 17 பணிகளுக்கு உங்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டி வைத்துள்ளேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிதி வழங்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 910 பெண்கள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக 5 ஆயிரத்து 260 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படுவதில்லை. சேலம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 48 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு ரூ.65 கோடியே 23 லட்சம் மதிப்பில் திருமண உதவித்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் உரிய நேரத்தில் திருமணம் செய்வதற்காக 2019-20-ம் ஆண்டு திருமண நிதி உதவி திட்டத்திற்கு ரூ.826 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டு திருமண உதவித்திட்டத்துக்கு 6 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக ரூ.18 கோடியே 73 லட்சம் தங்கத்துக்கு மட்டும் கொடுக்க இருக்கிறோம். திருமண உதவித்திட்டத்துக்கு ரூ.23 கோடியே 40 லட்சம் இந்த ஆண்டு கொடுக்க உள்ளோம். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தையும் உருவாக்கி படிப்படியாக செயல்படுத்தி தமிழகத்தில் வீடு இல்லாமல் யாரும் இல்லை நிலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னதாக விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆத்தூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் குளிர்சாதன சொகுசு பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி வாழப்பாடியில் இருந்து துக்கியாம்பாளையம், மேலூர், மாரியம்மன்புதூர், சமத்துவபுரம், அரசன்குட்டை, பள்ளத்தாதனூர், பேளூர் வழியாக பெரியகுட்டிமடுவு செல்லும் வகையில் வழித்தட நீட்டிப்பு சேவை பஸ்சினை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முடிவில் கலெக்டர் ராமன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story