குமரி மாவட்டத்தில் மழை: சுருளோட்டில் 42 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை: சுருளோட்டில் 42 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 29 Sep 2019 11:00 PM GMT (Updated: 2019-09-30T02:16:50+05:30)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சுருளோட்டில் 42 மி.மீ. பதிவாகி உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகல் 12 மணி வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்தது.

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மழை அதிகபட்சமாக சுருளோட்டில் 42 மி.மீ. பதிவாகி இருந்தது. இதே போல நாகர்கோவில்-13.4, பாலமோர்-6.4, கொட்டாரம்-5.2, குளச்சல்-16.8, குருந்தன்கோடு-3.2, அடையாமடை-39, கோழிப்போர்விளை-33, முள்ளங்கினாவிளை-37, திற்பரப்பு-41.4, பேச்சிப்பாறை-18, பெருஞ்சாணி- 7.4, சிற்றார் 1-34.4, சிற்றார் 2-15 என மழை பதிவாகி இருந்தது.

முக்கடல் அணை

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மலையோர பகுதிகளில் பெய்த தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் அதிகளவு வெள்ளம் கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 478 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 442 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 200 கனஅடியும், பொய்கை அணைக்கு 2 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 4 கனஅடியும் தண்ணீர் வந்தது.

அதே சமயம் பெருஞ்சாணி அணையில் இருந்து 100 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது.

நாகர்கோவிலின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் முக்கடல் அணைக்கும் தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி முக்கடல் அணையின் நீர்மட்டம் 14.50 அடியை எட்டியது. இதனால் நாகர்கோவில் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story