‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு: 2 இடைத்தரகர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை


‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு: 2 இடைத்தரகர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் 2 இடைத்தரகர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

தேனி,

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா (வயது 20), அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 26-ந்தேதி தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

டாக்டர் வெங்கடேசன் சி.பி.சி.ஐ.டி. போலீசில் அளித்த தகவலின் பேரில், சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், சென்னை பாலாஜி மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் அழைத்து வரப்பட்ட, சென்னை ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரி மாணவி அபிராமி, அவருடைய தந்தை மாதவன் ஆகியோரிடம் போலீசார் 2 நாட்களாக தொடர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் விடுவித்தனர்.

மாணவி அபிராமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள புகைப்படமும், அபிராமியின் உருவமும் ஒரே போன்று இருப்பதாக கூறிய போலீசார், அதன் உண்மைத்தன்மை அறிய அவற்றை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியதாக தெரிவித்தனர். தடய அறிவியல் சோதனை முடிவு வந்த பின்னர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிவிட்டு அவரை போலீசார் அனுப்பி உள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் தந்தைகளான டாக்டர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோர் விசாரணையின் போது, தங்களுக்கு வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த டாக்டர் ஷபி என்பவர் மூலமாக ரஷீத் என்ற இடைத்தரகர் அறிமுகம் ஆனதாகவும், அவருடைய மகன் முகமது இர்பானும் இதேபோன்று ஆள்மாறாட்டம் செய்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், ஷபி, முகமது இர்பானை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் டாக்டர் ஷபியை நேற்று முன்தினம் வாணியம்பாடியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்தனர். அவரை விசாரணைக்காக நேற்று அதிகாலையில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை சூப்பிரண்டு காட்வின்ஜெகதீஸ்குமார் மற்றும் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

ரஷீத் என்ற இடைத்தரகர் யார்? அவர் எப்படி அறிமுகம் ஆனார்? இன்னும் யாருக்கெல்லாம் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கிறது என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், இடைத்தரகர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது மகனை டாக்டராக்க கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை செலவு செய்து இருக்கும் தகவலை தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் ஷபியிடம் நடத்திய விசாரணையின் மூலம், ரஷீத் என்ற இடைத்தரகர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், இந்த ஆள்மாறாட்ட முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார் கூறுகையில், ‘முகமது இர்பானின் தந்தை டாக்டர் ஷபி வாணியம்பாடியில் பிரபல டாக்டர். அவருடைய சகோதரர்கள், உறவினர்கள் பலரும் டாக்டராக உள்ளனர். இதனால், தனது மகனையும் டாக்டராக்க ஆசைப்பட்டு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு ரஷீத் என்ற இடைத்தரகரிடம் கைதான மாணவர்களின் தந்தையர்கள் ஆளுக்கு ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர். ரஷீத் என்ற இடைத்தரகரை வாணியம்பாடியை சேர்ந்த வேதாச்சலம் என்ற நபர் அறிமுகம் செய்து வைத்ததாக ஷபி தெரிவித்துள்ளார். இதனால், வேதாச்சலமும் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்’ என்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் இடைத்தரகர்கள் வேதாச்சலம், ரஷீத் ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 சி.பி.சி.ஐ.டி. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் வேலூர், சென்னை, சேலம் போன்ற பகுதிகளிலும், கேரளா, மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவர்கள் சிக்கினால், ஆள்மாறாட்டம் செய்து மேலும் யாரெல்லாம் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள்? கடந்த கல்வி ஆண்டுகளிலும் இதேபோன்ற ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும்.

Next Story