ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டிக்கொலை: காஞ்சீபுரத்தை சேர்ந்த 5 பேர் கைது - பழிக்கு பழியாக கொன்றதாக வாக்குமூலம்


ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டிக்கொலை: காஞ்சீபுரத்தை சேர்ந்த 5 பேர் கைது - பழிக்கு பழியாக கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 1 Oct 2019 4:30 AM IST (Updated: 1 Oct 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறில், ஓடும் பஸ்சில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். பழிக்கு பழியாக கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

செய்யாறு, 

காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன்காளத்தி. அவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர், கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் செய்யாறு டவுனில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சதீஷ்குமார் செய்யாறு டவுனில் ஒரு தியேட்டர் அருகே உள்ள டீக்கடை முன்பு நின்று இருந்தார். அப்போது திடீரென ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் கீழே இறங்கி டீக்கடையில் நின்று கொண்டிருந்த சதீஷ்குமாரை வெட்டினர்.

இதனால் சுதாரித்துக்கொண்ட அவர், மர்ம நபர்களிடம் இருந்து உயிர் தப்ப அங்கிருந்து ஓடினார். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறுக்கு வந்த தனியார் பஸ்சில் சதீஷ்குமார் ஏறினார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அரிவாள்களுடன் பஸ்சில் ஏறினர். பின்னர் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தனிப்படையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்காடு போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயம் செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அப்போது காரில் 5 பேர் இருந்தனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சதீஷ்குமார் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருகி, அவர்கள் 5 பேரையும் பிடித்து தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் காரை பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சதீஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் 5 பேரும் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் டவுன் மூங்கில் மண்டபம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தேவன் (24). இவர், காஞ்சீபுரத்தை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கும்பலை சேர்ந்தவர். பிரபல ரவுடி மறைவிற்கு பிறகு சதீஷ்குமார் மற்றும் தேவன் இரு கோஷ்டியாக பிரிந்து போட்டி நிலவியது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சதீஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் சேர்ந்து தேவனை கத்தியால் வெட்டினர். இதில் உயிர் தப்பிய தேவன் பழி வாங்கும் நோக்கத்துடனே இருந்தார். சதீஷ்குமார் உயிருடன் இருந்தால் தன் உயிருக்கு ஆபத்து என நினைத்த தேவன், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் செய்யாறில் இருப்பதை தெரிந்து கொண்ட தேவன் மற்றும் அவருடைய நண்பர்கள் காஞ்சீபுரத்தை சேர்ந்த திருவேங்கிடம் மகன் பத்மநாபன் (24), குமார் மகன் சிகாமணி (25), முனியாண்டி மகன் ரமேஷ் (24), மோகன் மகன் நந்தகோபால் (24) மற்றும் 3 பேருடன் செய்யாறுக்கு வந்து சதீஷ்குமாரை கொலை செய்ய கண்காணித்து வந்தோம்.

கடந்த 28-ந் தேதி சதீஷ்குமார் டீக்கடையில் இருப்பதை பார்த்தவுடன் அரிவாளுடன் காரில் இருந்து இறங்கி வந்து வெட்டினோம். இதில் அவர் தப்பி ஓடி பஸ்சில் ஏறினார். ஆனால் நாங்கள் தொடர்ந்து துரத்தி சென்று பஸ்சில் ஏறி சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டோம். நேற்று முன்தினம் ஆற்காட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சிக்கிக்கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து தேவன், பத்மநாபன், சிகாமணி, ரமேஷ், நந்தகோபால் ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story