திருச்சி விமான நிலையத்தில் ரூ.17¼ லட்சம் கடத்தல் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.17¼ லட்சம் கடத்தல் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:45 AM IST (Updated: 2 Oct 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17¼ லட்சம் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்தவர் உள்பட 8 பேரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஷேக் நசுருதீன்(வயது 48) என்பவர் தனது உடலில் மறைத்து 199.5 கிராம் எடை கொண்ட 5 தங்க சங்கிலிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.7½ லட்சம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு நேற்று முன்தினம் இரவு விமானத்தில் புறப்பட இருந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையை சேர்ந்த கருப்புசாமி மற்றும் சேட், சிவகங்கையை சேர்ந்த ஜான்கென்னடி, திருவாடானையைச் சேர்ந்த தாஜ்முகமது மற்றும் தமீம் அபுபக்கர், தொண்டியை சேர்ந்த முகமது ரியாஸ், திருநெல்வேலியை சேர்ந்த சுவைப்பு ஆகிய 7 பேர் தங்களது உடைமைகளில் மறைத்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.9.83 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ஷேக் நசுருதீன் உள்பட 8 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story