தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் முற்றுகை


தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Oct 2019 4:30 AM IST (Updated: 4 Oct 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர்,

திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் உள்ளது. இந்த பகுதியில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் கடந்த 10 நாட்களாக கொள்முதல் நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து காத்துக்கிடக்கின்றனர்.

நெல் மூட்டைகளுடன் முற்றுகை

இந்த நிலையில் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் குருசாமி, முன்னாள் நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நெல் மூட்டைகளுடன் தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் நெல்மூட்டைகளை அலுவலகத்தில் வாசல் முன்பு இறக்கி வைத்து நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘‘நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் இழப்புக்குள்ளாகி உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் எங்குமே நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. ஆனால் அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன என்கிறார்கள். ஆனால் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்துவோம்’’என்றனர்.

1 More update

Next Story