பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் சாலை மறியல்


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 4:47 PM GMT)

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்-விவசாயிகள் சாலை மறியல் போராட்த்தில் ஈடுபட்டனர். இதில் 36 பெண்கள் உள்பட 385 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தின் மூலம் 2018-19-ம் ஆண்டிற்கான நெல் பயிருக்கு இழப்பீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 573 கிராம வருவாய் வட்டங்களில், 357 வட்டங்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை வந்துள்ளது. எனவே தென்னை மரங்களுக்கான மகசூல் இழப்பிற்கு நிர்ணயிப்பதுபோல் வேளாண் பல்கலைக்கழகத்தால் நிர்ணயித்துள்ள ஒரு ஏக்கருக்கான நெல் மகசூல் அளவையே அடிப்படையாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் இழப்பீடு வழங்கிடும் முறையில் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். தற்போது விடுபட்டுள்ள 216 கிராமங்களுக்கும் உரிய பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

சாலை மறியல்

அதன்படி திருவாரூர் அருகே உள்ள மாங்குடி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி-விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றிய விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் சின்னதம்பி, தர்மதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொரடாச்சேரி

இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கேசவராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜோசப், மணியன், பக்கிரிசாமி, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் திருவாரூர்- தஞ்சாவூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மன்னார்குடி

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி ஒன்றிய, நகரக்குழுவின் சார்பில் மன்னார்குடி கீழப்பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துரைஅருள்ராஜன், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர தலைவர் ராஜ்குமார், நகர செயலாளர் கலியபெருமாள், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், நகர செயலாளர் சிவ ரஞ்சித், மாதர் சங்க தலைவி வனிதா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர். இதனால் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய வழித்தடங்களில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

வலங்கைமான்

வலங்கைமான் கடைத் தெருவில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை வலங்கைமான் போலீசார் கைது செய்தனர்.

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பரந்தாமன் தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 58 பேரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலம்

பயிர் காப்பீட்டு தொகையை உடன் வழங்கிடக்கோரி நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் பாரதிமோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன், விவசாயிகள் சங்க நிர்வாகி ராதா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிடக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாயிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதனால் தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியலில் 36 பெண்கள் உள்பட 385 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story