கடலோர மாவட்டங்களில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் மாநில மீனவர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்


கடலோர மாவட்டங்களில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் மாநில மீனவர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 Oct 2019 10:45 PM GMT (Updated: 5 Oct 2019 10:18 PM GMT)

கடலோர மாவட்டங்களில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மாநில மீனவர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் சபீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஹெலிகாப்டர் தளம்

மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 60 வயதை கடந்த மீனவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும், மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்படும் விசைப்படகுகளுக்கு 5 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய்யும், நாட்டு படகுகளுக்கு 500 லிட்டர் மண்எண்ணெய்யும் மானியத்தில் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஒகி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண நிதியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்புக்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். கடலில் மாயமாகும் மீனவர்களை தேடுவதற்கு நவீன படகுகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

நிதி உதவி

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் பல படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே படகுகளை இழந்த மீனவர்களுக்கு புதிய படகுகள் வாங்க மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story