450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அபாயம் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை


450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அபாயம் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2019 10:45 PM GMT (Updated: 6 Oct 2019 7:00 PM GMT)

கீழ்வேளூர் அருகே மோகனூரில் 450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. எனவே பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இந்த மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். ஆனால் பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்படாததாலும் முப்போக சாகுபடி கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பல்வேறு தடைகளை தாண்டி கடை மடைப்பகுதியான நாகைக்கு வந்தது. இதையடுத்து நாகை விவசாயிகள் நேரடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் மூலம் சம்பா சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நெற்பயிர்கள் கருகும் அபாயம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா மோகனூர் வருவாய் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இதுவரை வந்து சேரவில்லை. மேலும் மோகனூர் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் வயல்களுக்கு செல்ல முடியவில்லை. இதனால் நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் 450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. எனவே சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் அந்த பகுதியில் உள்ள வீரன் வாய்க்காலில் இருந்து ஆயில் என்ஜின் மோட்டார் மூலம் அருகில் உள்ள வயல்களுக்கு தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

கூடுதல் தண்ணீர் திறக்க கோரிக்கை

எனவே நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மோகனூர் விவசாயிகள் சிங்காரவேலு, மாரியப்பன் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story