ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.4 லட்சம் பறிமுதல்


ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - ரூ.4 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:00 PM GMT (Updated: 11 Oct 2019 8:19 PM GMT)

ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் மற்றும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரணி, 

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் ரகுநாதபுரம் கூட்ரோடு அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.

இங்கு செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், வெம்பாக்கம் ஆகிய தாலுகாக்கள் உள்ளடங்கிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் பெர்மிட், புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றுகள் பெற பொதுமக்கள் இந்த அலுவலகத்துக்கு வருகின்றனர்.

இங்கு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று பகல் 2 மணியளவில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருள், மைதிலி, பிரியா மற்றும் 7 போலீசார் உள்பட 11 பேர் கொண்ட குழு திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் இருந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் செயல்பட்டு வரும் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் இருந்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆவணங்களையும் அங்கு இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து பைகளில் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் அலுவலகத்தில் பணத்துடன் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள், ஓட்டுனர் உரிமம் பெற வந்திருந்தவர்கள், பெர்மிட் பெற வந்திருந்தவர்கள் அவர்களிடம் இருந்த பணத்தையும் கணக்கிட்டு, யார் பணம் கேட்டது, எதற்காக இவ்வளவு பணம் கொண்டு வந்தீர்கள் என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பின்னர் உரிய ஆவணங்கள் இருந்தவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டனர்.

சரியான ஆவணங்கள் இல்லாதவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களிடம் அத்தாட்சி ரசீதுகளை வழங்கி அனுப்பினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story