பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் 32 பேர் கைது


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் 32 பேர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 7:04 PM GMT)

சீர்காழியில், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டத்தில் உள்ள 146 கிராமங்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காத பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சீர்காழியில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் செல்லப்பன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் வீரராஜ், ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இழப்பீடு நிர்ணயத்தில் வெளிப்படையாக செயல்பட வேண்டும். வேளாண்மைத்துறை சார்பில் மானிய விலையில் தரமான விதை, உரம் போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். சம்பா சாகுபடி பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் திறந்துவிட வேண்டும். தகுதி உடைய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சிவராமன், கட்சி நிர்வாகிகள் நீதிசோழன், ஜெயகுமார், பாஸ்கர், பிரபாகரன் மற்றும் 3 பெண்கள் உள்பட 32 பேரை கைது செய்தனர். இந்த சாலை மறியலால் சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story