இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் கோரிக்கை


இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2019 4:30 AM IST (Updated: 15 Oct 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவக பணியாளர்கள் சிலர் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். வெற்றி மகளிர் சுயஉதவிக்குழு என்ற பெயரில் 12 பேர் இணைந்து நடத்தி வருகிறோம். தற்போது இக்குழுவில் உள்ள ஒருவர், உணவகத்தை தொடர்ந்து நடத்தவிடாமல் இடையூறு செய்து வருகிறார். மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் தான் இக்குழு தொடங்கப்பட்டது. இப்போது இக்குழுவின் தலைவியாக ஒருவரை நியமிக்க சொல்லி மாநகராட்சியில் பணியாற்றும் வருவாய்த்துறை உதவி அலுவலர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

தவறும்பட்சத்தில் இக்குழுவை கலைத்துவிட்டு, புதிதாக குழு தொடங்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி தொடங்கப்பட்ட இந்த குழுவை அவரின் கவனத்திற்கு தெரியாமல் கலைக்க சொல்லி சிலர் நெருக்கடி தருகின்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தினால் எங்களுக்கான ஊதியத்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. தீபாவளி நெருங்கி வருவதால் நிலுவையில் உள்ள எங்களது ஊதியத்தொகையை வழங்கினால் எங்கள் குடும்ப க‌‌ஷ்டங்களை தீர்த்து கொள்ள உதவியாக இருக்கும். எனவே எங்களது வாழ்வாதாரத்தை காக்கவும், தொடர்ந்து அம்மா உணவகத்தை நல்ல முறையில் நடத்திடவும், நிலுவை ஊதியத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காப்பீட்டு தொகை

தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஒக்கநாடு கீழையூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், கடந்த ஆண்டு கஜா புயலினால் எங்களது விவசாய பயிர்கள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகி விளைச்சல் குறைந்து எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கள் கிராமமும் ஒன்று. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களும், அரசும் மிக குறைவான காப்பீட்டு தொகையை அறிவித்துள்ளது. வெறும் 5 சதவீதம் காப்பீட்டு தொகையை ஏற்று கொள்ள முடியாது. எனவே எங்கள் கிராமத்தில் ஆய்வு செய்து பயிர் காப்பீட்டு தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுமனைப்பட்டா

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்த 80 பெண்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், நாங்கள் வசித்து வரும் இடத்திற்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. இப்போது திடீரென நாங்கள் தங்கியுள்ள வீடுகளை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

விளைநிலங்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கரம்பயம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 25 ஏக்கர் நிலத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த 50 பேர் தென்னை, நெல் ஆகியவைகளை சாகுபடிகளை செய்து வருகின்றனர். இந்த நிலத்தை தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் கைப்பற்றி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்து இருக்கின்றனர். இந்த முடிவை கைவிட வேண்டும். விளைநிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story