மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்


மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:15 AM IST (Updated: 15 Oct 2019 8:34 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தொடங்கி வைத்தார்.

கல்வி மாவட்ட அலுவலர்கள் செல்வராஜ் (அரியலூர்), மணிமொழி (செந்துறை), ஹரிசெல்வராஜ் (உடையார்பாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 11, 14, 17, 19 என்ற வயதின் அடிப்படையில் 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து குறுவட்ட போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த 72 மாணவர்கள், 72 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் 3 மாணவர்கள் வீதம் ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் என மொத்தம் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். போட்டிகள் அனைத்தும் சுவிஸ் பேரிங் முறையில் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டது.

பதக்கம்

11 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி சுஜி முதலிடத்தையும், ஆண்டிமடம் தூய மார்டின் பள்ளி மாணவி அட்சயா 2-ம் இடத்தையும், சன்னாசி நல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி அகல்யா 3-ம் இடத்தையும் பெற்றனர். மாணவர் பிரிவில் பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் அரசு முதலிடத்தையும், இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவன் ஹரிஹரன் 2-ம் இடத்தையும், பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் லோகே‌‌ஷ் பாலாஜி 3-ம் இடத்தையும் பெற்றனர். இதேபோல் 14, 17, 19 உள்ளிட்ட பிரிவுகளிலும் மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.


Next Story