தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Oct 2019 5:30 AM IST (Updated: 15 Oct 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் வாகன சோதனையில் தம்பதியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

கடலூர்,

சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போலீஸ்காரர் மரியசார்லஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியை நிறுத்தி, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் தான் பயணம் செய்ய வேண்டும். ஏன் 2 குழந்தைகளையும் அழைத்து வந்தீர்கள்?, 4 பேர் வந்தது தவறு என்று அபராத தொகையை செலுத்தும்படி கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு போலீசாரும், அந்த தம்பதியிடம் தவறான வார்த்தைகளை கூறி, ‘ஹெல்மெட்’ அணியாதது ஏன்?, ஒரிஜினல் ஆர்.சி.புக், லைசென்ஸ் கொண்டு வராதது ஏன்? என்று அடுத்தடுத்து கேள்வி கணைகளை தொடுத்து தம்பதியை கலங்கடித்தனர். அந்த தம்பதி மன்னிப்பு கேட்டும் போலீசார் விடவில்லை. இந்த சம்பவம் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வைரலாகியது.

வாகன சோதனையில் போலீஸ்காரர்களுக்கும், தம்பதியருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் வாகன சோதனையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிதம்பரம் நகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போலீஸ்காரர் மரியசார்லஸ் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

Next Story